பயணிகளை ஏற்றாமல் சென்ற விமானம்: ரூ. 10 லட்சம் அபராதம்

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு ‘கோ பர்ஸ்ட்’ விமானம் புறப்பட்டது.;

Update:2023-01-28 05:12 IST

டெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 9-ம் தேதி காலை 6.40 மணிக்கு டெல்லிக்கு 'கோ பர்ஸ்ட்' விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணிகளின் உடைமைகள் ஏற்றப்பட்ட நிலையில் 55 பயணிகளை ஏற்றாமல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

55 பயணிகளை ஏற்றாமல் அவர்களின் உடைமைகளை மட்டும் ஏற்றிக்கொண்டு விமானம் பெங்களூருவில் இருந்து டெல்லி புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் அந்த விமானத்தில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 55 பயணிகளும் தங்கள் விமானத்தில் அடுத்த ஓராண்டுக்கு இந்தியாவுக்குள் எந்த இடத்திற்கும் இலவசமாக பயணிக்கலாம் என்றும் 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனம் அறிவித்தது.

இதனிடையே, 55 பயணிகளை ஏற்றாமல் விமான நிலையத்திலேயே விட்டு சென்றது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக 'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி பெண் பயணி மீது சிறுநீர் கழித்த 2 விவகாரங்களில் மொத்தம் 40 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்