கொரோனா கால உதவிக்கு பதிலாக கட்டாய மதமாற்றம்: இந்து கடவுள்கள் அவமதிப்பு; 9 பேர் மீது வழக்கு
உத்தர பிரதேசத்தில் கொரோனா காலத்தில் ரேசன், பணம் என கொடுத்து உதவி செய்ததற்கு பதிலாக 100 பேரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி உள்ளனர்.
மீரட்,
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் மங்காதபுரம் காலனியில் வசித்து வரும் சிலர் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பிரம்மபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரெண்டு ரோகித் சிங் சஜ்வான் உத்தரவிட்டு உள்ளார்.
அந்த புகாரில், கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது போடப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து சிலர், மங்காதபுரம் காலனிவாசிகளுக்கு உணவு, நிதி உதவி உள்ளிட்டவற்றை அளித்து உள்ளனர்.
இதற்கு பதிலாக கிறிஸ்வத ஆலயத்திற்கு வரும்படியும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தியும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, அந்த காலனிவாசிகளின் வீடுகளில் இருந்து பெண் மற்றும் ஆண் இந்து கடவுள்களின் உருவபடங்களையும் வெளியே வீசி எறிந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கத்திகள் மற்றும் கம்புகளை கொண்டு மிரட்டியும் உள்ளனர்.
இதுபற்றி வெளியே எவரிடமும் கூற கூடாது என்றும் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி பா.ஜ.க. உள்ளூர் தலைவர் தீபக் சர்மா கூறும்போது, 100 பேர் வரை கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
3 ஆண்டுகளாகவே இது நடந்து வருகிறது. கொரோனா காலத்தின்போது, மக்களுக்கு அரிசியும், பணமும் கொடுத்து விட்டு கட்டடாய மதமாற்றத்திற்கு ஆளாக்கி இருக்கின்றனர். மீதமுள்ள மற்றவர்களையும் கட்டாயப்படுத்தி மிரட்டி வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் நடந்த முதல் கட்ட விசாரணை முடிவில் 3 பெண்கள் உள்பட 9 பேர் மீது சட்டவிரோத மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் சப்பிலி என்ற சிவா, பின்வா, அனில், சர்தார், நிக்கு, பசந்த், பிரேமா, தித்லி மற்றும் ரீனா என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
அவர்களில் இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.