ஆந்திராவில் வெள்ள பாதிப்பு; மத்திய நிபுணர் குழு அமைப்பு - அமித்ஷா தகவல்
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.;
அமராவதி,
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் சுமார் 6.44 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு சூழ்நிலையை மோடி அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்(பேரிடர் மேலாண்மை) தலைமையில் ஒரு மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இக்குழுவினர் நேரில் சென்று வெள்ள மேலாண்மை, நீர்த்தேக்க மேலாண்மை, அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை நேரில் பார்வையிட்டு உடனடி நிவாரணத்திற்கான பரிந்துரைகளை வழங்குவார்கள்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.