வெளிநாட்டு போர் பயிற்சியில் பங்கேற்று புதிய சரித்திரம் படைத்த முதல் இந்திய பெண் விமானி...!
வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய பெண் விமானி என்ற புதிய சரித்திரத்தை அவனி சதுர்வேதி படைத்துள்ளார்.;
புதுடெல்லி,
நமது நாட்டில் "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு:?" என்று கேட்ட காலம் என்று ஒன்று உண்டு. இன்று அது மாறி இருக்கிறது. "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்ற கவி பாரதியின் கனவு நனவாகி இருக்கிறது. ஆண்களைப்போன்றே பெண்கள் எல்லா துறைகளிலும் வந்து, முத்திரை பதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அப்படி ஒரு சாதனை வீராங்கனைதான், அவனி சதுர்வேதி (வயது 29). மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் படித்து பி.டெக். பட்டம் பெற்றார். தொடர்ந்து ஐதராபாத்தில் இந்திய வான்படை கல்விக்கழகத்தில் பயிற்சி பெற்றார். அதையடுத்து 2016-ம் ஆண்டு, ஜூன் மாதம் இந்திய விமானப்படை போர் விமானியாகி (சுகோய்-30 எம்.கே.ஐ. விமானி) புதிய சரித்திரம் படைத்தார்.
இந்த சாதனை சரித்திரத்தில் இவருடன் சமபங்கு பெறுபவர்கள், பாவனா காந்த், மோகனா சிங் ஆவார்கள். இந்திய விமானப்படையில் தற்போது 20 பெண் போர் விமானிகள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவனி சதுர்வேதிக்கு ஒரு அபூர்வ வாய்ப்பு வாய்த்தது. அது, ஜப்பான் விமானப்படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து 'வீர் கார்டியன்-2023' என்ற பெயரில் நடத்திய கூட்டு போர் பயிற்சியில் அவனி சதுர்வேதியும் பங்கேற்று அசத்தி இருக்கிறார்.
இந்த கூட்டு போர் பயிற்சி ஜப்பானின் ஹயாகுரி விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடந்திருக்கிறது. இதில் அவனி சதுர்வேதி பங்கேற்றதின் மூலம், வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் போர் விமானி என்ற புதிய சரித்திரத்தையும் எழுதி உள்ளார்.
இந்த போர் பயிற்சியில் வான் போர் சூழ்ச்சி, இடைமறிப்பு மற்றும் வான் பாதுகாப்பு பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நாடு திரும்பி உள்ள அவனி சதுர்வேதி தனது அனுபவத்தை செய்தி நிறுவனம் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-
பறக்கும் பயிற்சியில், அதுவும் வெளிநாட்டு விமானப்படையுடன் பயிற்சியில் ஈடுபடுவது என்பது எப்போதுமே நல்லதொரு அனுபவம்தான். இது இன்னும் நல்ல அனுபவம் என்பேன். ஏனென்றால், சர்வதேச பயிற்சியில் நானும் ஈடுபட்டது இதுவே முதல் முறை ஆகும். இது எனக்கு மாபெரும் வாய்ப்பு, அற்புதமான கற்றல் வாய்ப்பு.
அனைத்து இளைஞர்களுக்கும், ஆர்வம் உள்ள பெண்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களுக்கு வானம்தான் எல்லை. இந்திய விமானப்படை ஒரு அற்புதமான பணி வாய்ப்பினைத் தருகிறது. போர் விமானத்தில் பறப்பது என்பது உண்மையிலேயே பரவசமானது.
இந்திய விமானப்படையில் சேருவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், உங்கள் கண்களில் அதை இலக்காக கொண்டிருங்கள். அந்த இலக்கை நோக்கி உறுதியுடன் செல்லுங்கள்,
இவ்வாறு அவர் கூறினார்.