காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு போட்டி நடக்கிறது.;

Update:2022-09-23 05:27 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

கட்சி கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்குமாறு கடந்த 2020-ம் ஆண்டு அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடக்கும் என்று காங்கிரசின் தேர்தல் பிரிவு கடந்த ஆண்டு அறிவித்தது.

ஆனால், காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பாதயாத்திரை பணிகளால் இத்தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போனது. அதன்படி, அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்டது. காங்கிரஸ் சட்ட திட்டங்களின் 18-வது விதியின் கீழ் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி இதை வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யுமாறு காங்கிரஸ் பிரதிநிதிகளை கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.

தேர்தல் கால அட்டவணைப்படி, வேட்புமனு தாக்கல் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இம்மாதம் 30-ந் தேதி கடைசிநாள்.

அக்டோபர் 1-ந் தேதி, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தால், அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 19-ந் ேததி, ஓட்டுகள் எண்ணப்படும்.

தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பாணை வெளியிடப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளன.

22 ஆண்டுக்கு பிறகு போட்டி

தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி தொடர்ந்து தயங்கி வருவதால், மேலிட ஆசியுடன், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், வேட்பாளராக களம் காண்பார் என்று தெரிகிறது. தொண்டர்கள் விரும்பினால், தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதே சமயத்தில், அவரை எதிர்த்து சசிதரூர் எம்.பி., தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று தெரிகிறது. அவர் மதுசூதன் மிஸ்திரியை சந்தித்து, வேட்புமனு தாக்கல் தொடர்பான நடைமுறைகளை கேட்டறிந்தார்.

எனவே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டி நடப்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. 22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு போட்டி நடக்கிறது.

2000-ம் ஆண்டு, தலைவர் பதவிக்கு சோனியாகாந்தியும், ஜிதேந்திர பிரசாதாவும் போட்டியிட்டனர். அதில் சோனியாகாந்தி வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பு, 1997-ம் ஆண்டும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தது. அப்போது, சரத்பவார், ராஜேஷ் பைலட் ஆகியோரை தோற்கடித்து சீதாராம் கேசரி தலைவர் ஆனார்.

ராகுல்காந்தி தலைவராக இருந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளை தவிர, 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சோனியாகாந்தி தலைவராக இருக்கிறார். காங்கிரசில் நீண்ட காலம் தலைவராக இருப்பவர் அவரே ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்