பண்டிகைக்கால தொற்று பரவல்; தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு பண்டிகைக்கால தொற்று பரவலுக்கான எச்சரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது.

Update: 2022-08-09 02:28 GMT



புதுடெல்லி,



நாட்டில் வரவுள்ள பண்டிகை காலங்களை முன்னிட்டு கொரோனா பரவலுக்கான ஆபத்து அதிகரித்து உள்ளது என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு கூடுதலாக பதிவாகி வருகிறது.

இதுவரை டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என்றும் பின்னர் பி.ஏ. வகை என தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வைரசானது மீண்டும் உருமாற்றம் அடைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த போதிலும், லேசான அறிகுறிகளே அதிகளவில் காணப்படுகின்றன என நிபுணர்கள் கூறியுள்ளனர். எனினும், பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளும்படியும், சமூக இடைவெளி மற்றும் முககவசங்களை அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லி, கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, தமிழகம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கிற பண்டிகை காலங்களில் பெருமளவில் கூட்டம் கூடும்.

இதனால், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட தொற்று நோய்களின் பரவல் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பருவகாலம் மற்றும் பண்டிகை காலங்களில் தொற்று ஏற்படுவதற்கான மற்றும் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. உணவு மற்றும் நீர் சார்ந்த தொற்றுகள் மற்றும் சுவாச பகுதியில் தொற்றுகள் ஏற்படுவது ஆகியவற்றுக்கான சாத்தியங்கள் அதிகம். சமீப காலங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதனால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றி கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு, பண்டிகைகளை குடும்பத்துடனேயே கொண்டாடுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களும் போதிய பரிசோதனைகளை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுவதனை ஊக்கப்படுத்த வேண்டும். தொற்று அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்