பிரிந்து சென்ற மனைவி.. அண்ணன் மகள்கள், அண்ணியை கொன்றுவிட்டு என்ஜினீயர் தற்கொலை
கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பெங்களூரு என்ஜினீயர், அண்ணன் மகள்கள், அண்ணியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
அமராவதி,
ஆந்திர மாநிலம் திருப்பதி பத்மாவதி நகரை சேர்ந்தவர் தாஸ் (வயது 40). இவர், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சுனிதா (35), மகள்கள் தேவிஸ்ரீ (13), நீரஜா (11). இவர்கள் 2 பேரும் அங்குள்ள பள்ளியில் 8 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.
தாசின் தம்பி மோகன் (36). இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். மோகனுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி மோகனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து தாஸ் குடும்பத்தினர் வேறொரு பெண்ணை பார்த்து மோகனுக்கு 2-வது திருமணத்தை நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால், அந்தப் பெண்ணும் தனக்கு பிடிக்கவில்லை என்று மோகன் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தாஸ் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி மோகனுக்கு 2-வது திருமணத்தை செய்து வைத்துள்ளனர். மோகன் அதே பகுதியில் தனியாக மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. மோகனை விட்டு பிரிந்த மனைவி தனது பெண் குழந்தையை தூக்கி கொண்டு தனியாகச் சென்று விட்டார். இதனால் மோகன் மனவேதனையில் இருந்து வந்தார்.
தனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில், தற்போது மனைவி, குழந்தையை தூக்கிக் கொண்டு பிரிந்து சென்று விட்டாரே என்று மனம் வருந்திய மோகன் அடிக்கடி அண்ணன், அண்ணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். எனது வாழ்க்கையை சீரழித்து விட்டு, நீ மட்டும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறாயா? எனக் கேட்டு மோகன் தனது அண்ணனிடம் தகராறு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை தாஸ் வெளியே சென்று விட்டார். வீட்டில் சுனிதா மற்றும் 2 மகள்கள் இருந்தனர். அப்போது வீட்டுக்கு வந்த மோகன் தனது அண்ணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த மோகன், தான் வைத்திருந்த கத்தியால் சுனிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். அவரின் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த மகள்கள் ஓடி வந்தனர்.
தங்களுடைய தாயார் இறந்து கிடந்ததைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டு அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் தாஸ் வீட்டுக்கு ஓடி வந்தனர். உடனே மோகன் வீட்டின் கதவை உள் தாழ்ப்பாள் போட்டு விட்டு தேவிஸ்ரீ, நீரஜா இருவரின் கழுத்தையும் அறுத்து படுகொலை செய்தார்.
இதையடுத்து மனமுடைந்த மோகன், தாஸ் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்போன் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.