அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து..!

அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஸ்ராவிற்கு 3-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-11 09:41 GMT

புதுடெல்லி,

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் தந்திரத்தை பாதிக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, "அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது" என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு 3-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது என்றும் இருப்பினும் அவர் ஜூலை 31, 2023 வரை பணியில் தொடர அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெறும் வயதை அடைந்த பிறகு அமலாக்க இயக்குனராக பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவி நீட்டிப்பு குறுகிய காலத்திற்கு இருக்க வேண்டும் என்றும், 3-வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது 2021ல் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்