பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை - மத்திய அரசு தகவல்
கர்நாடக நிறுவனம் தயாரித்த பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி, -
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடக ஆண்டிபயாடிக் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகுதியான மெட்ரானிடசோல் 400 மி.கி மற்றும் பாராசிட்டமால் 500 மி.கி மாத்திரைகள் முறையே தரமானதாக இல்லை என்று சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940 மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள், 1945 ஆகியவற்றின்படி நடவடிக்கை எடுப்பதற்காக மருந்துகள் தொடர்பான புகார்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.