ஜனாதிபதி தேர்தல்: பீகாரில் ஆதரவு திரட்டினார் திரவுபதி முர்மு

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாளே உள்ள நிலையில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பீகாரில் ஆதரவு திரட்டினார்.;

Update:2022-07-05 23:29 IST

பீகாரில் முர்மு

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்காவும் நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில் திரவுபதி முர்மு பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடையே ஆதரவு திரட்டுவதற்காக நேற்று அந்த மாநிலத்தின் தலைநகரான பாட்னாவுக்கு சென்றார்.

விமான நிலையத்தில் அவரை துணை முதல்-மந்திரிகள் தர்கிஷோர் பிரசாத், ரேணு தேவி, மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன்ராம் மஞ்சி, மத்திய மந்திரிகள் நித்யானந்த் ராய், பசுபதி குமார் பரஸ், லோக்ஜனசக்தி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரரும், பழஙகுடி இன தலைவருமான பிர்சா முண்டா சிலைக்கு திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

நிதிஷ்குமார் நம்பிக்கை

அதையடுத்து நகரில் உள்ள ஓட்டலில் பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களை திரவுபதி முர்மு சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பேசும்போது, "ஒரு பழங்குடி இன பெண் நாட்டின் ஜனாதிபதி ஆவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜனாதிபதி தேர்தலில் முர்மு அமோக வெற்றி பெறுவார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்" என குறிப்பிட்டார். மாநில பா.ஜ.க. தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் பேசும்போது, "சந்தால் பழங்குடியின பெண் முர்மு அடுத்த ஜனாதிபதி ஆகப்போவது நெஞ்சைத்தொடுகிறது" என குறிப்பிட்டார்.

மேலும், "முர்மு பரிசுத்தமானவர், எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். எல்லா எதிர்க்கட்சிகளும் தங்களது ஆதரவை அவருக்கு அளிக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்