பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை உறுதி செய்தது வெளியுறவுத் துறை

பிரதமர் மோடி 21 முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Update: 2024-09-19 14:14 GMT
Filepic

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்காவில் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

அதேபோல் ஐ.நா. பொதுச்சபையில் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 'எதிர்கால உச்சி மாநாடு 2024' என்கிற தலைப்பில் ஐ.நா. மாநாடு நடைபெறுகிறது. இந்த 2 நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர் 21 முதல் 23-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவுக்கு வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவில் இருப்பார். ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டுக்காக நியூயார்க் செல்வதற்கு முன், குவாட் உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி நேரடியாக டெலாவேரில் உள்ள வில்மிங்டனுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவாழ் இந்தியர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மேலும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்துவார். அதோடு, பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் பிரதமர் மோடி நடத்துவார்" என தெரிவித்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்ப்,மோடியை சந்திப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்பு தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. அவர்கள், அமெரிக்காவில் பல்வேறு சந்திப்புகளுக்கு முயல்கிறார்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டவுடன், அது குறித்து முறையாக தெரிவிப்போம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்