மைசூருவில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்
தசரா விழாவையொட்டி மைசூருவில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.;
மைசூரு
மைசூரு தசரா விழா
உலகப்பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி கொண்டாடப்படுகிறது. இந்த தசரா திருவிழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.
இந்தநிலையில், இந்த ஆண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
தசரா விழாவில் பங்கேற்க உள்ள 14 யானைகளுக்கும் அரண்மனை வளாகத்தில் நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தசரா விழா தொடங்குவதற்கு இன்னும் 22 நாட்களே இருப்பதால் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதாவது, அரண்மனை வளாகத்தில் உள்ள அனைத்து கோவில்கள், தடுப்பு சுவர்கள், கோட்டை நுழைவு வாயில்கள் என அரண்மனை முழுவதும் வர்ணம் பூசும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
மன்னர் காலம்
மைசூரு டவுனில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள், டவுன் நுழைவு வாயில் கட்டிடங்கள், மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில், அரண்மனை கட்டிடங்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகளில், 25 ஆயிரம் பல்புகள் வரை பழுதடைந்து உள்ளன. இந்தநிலையில் பல்புகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அந்த டெண்டர் வழங்கப்பட்டவுடன் பல்புகள் விரைவில் அரண்மனை கட்டிடங்களில் மாட்டப்படும். அதாவது நவராத்திரி உற்சவத்திற்கு முன்பே பணிகள் முடிக்கப்படும்.
மாவட்ட நிர்வாகம், அரண்மனை மண்டலி நிர்வாகம் ஆகியவை இந்த பொறுப்பை ஏற்றுள்ளது.
திரைப்பட உற்சவம்
அக்டோபர் 16-ந்தேதியில் இருந்து 22-ந் தேதி வரை திரைப்பட உற்சவம் நடக்கிறது. மைசூரு டவுனில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் தசரா திரைப்பட உற்சவம் ஏற்படுத்தப்படுகிறது.
சர்வதேச விருது பெற்றிருக்கும் கன்னட திரைப்படங்கள், ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் ஆகியோர்களின் திரைப்படங்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளின் திரைப்படங்கள் வெளியிடப்படும்.
இந்த தசரா திரைப்பட விழாவில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படங்களை பொதுமக்கள் பார்ப்பதற்கு பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
என திரைப்பட விழா கமிட்டி சிறப்பு அதிகாரியும் சுற்றுலாத்துறை இயக்குனருமான எம்.கே. சவிதா கூறியுள்ளார்.
உலக கண்காட்சி
அதேபோல், காவேரி நீர் வாரிய அலுவலகத்தில் உலக புத்தக கண்காட்சி, ஆலனஅள்ளி பகுதியில் உள்ள லலிதா மஹால் பேலஸ் மைதானம் மற்றும் பழைய கலெக்டர் அலுவலக பின்புறத்தில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் தசரா உணவு மேளா நடக்கிறது.
மேலும், டவுன்ஹால், ஜெகன்மோகன அரண்மனை, லலிதா ஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பாட்டு கச்சேரி நடக்கிறது.
மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இளைஞர் தசரா, கலா மஞ்சுளாவின் கவிஞர் கோஷ்டி, நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.