டெல்லி மாநகராட்சி தேர்தல்: போலீசார் ரோந்து பணி; அனைத்து கடைகளும் நாளை மூடப்படும்

டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2022-12-03 15:13 GMT


புதுடெல்லி,


டெல்லியில் நாளை மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

இதற்காக 13 ஆயிரத்து 638 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், நாளை நடைபெறும் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7-ந்தேதி நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு போலீசார் பதற்றம் நிறைந்த தர்யாகஞ்ச் மற்றும் ஜமா மசூதி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோன்று, தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அனைத்து சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகள் நாளை மூடப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்து உள்ளது.

அதன் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறும்போது, மாநகராட்சி தேர்தலை அடுத்து தேர்தல் ஆணையம் நாளை அதிகாரப்பூர்வ விடுமுறை எதுவும் அறிவிக்கவில்லை.

இதனால், நாளை விடுமுறை நாளா, இல்லையா என்று கடைக்காரர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஏனெனில், ஞாயிற்று கிழமைகளில் மொத்த விற்பனை சந்தைகளுக்கு வார விடுமுறையாக இருக்கும்.

ஆனால், சில்லரை விற்பனை கடைகள் திறந்திருக்கும். இதனால், சந்தைகளின் யூனியன் தலைவர்கள் அனைவருடன் எங்களது அமைப்பு கலந்து பேசி, நாங்கள் அனைவரும் ஒரு மனதுடன் நாளை (டிசம்பர் 4-ந்தேதி) சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகளை மூடுவது என முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்