அரியானா: விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட ஷம்பு எல்லையை திறக்க கோர்ட்டு உத்தரவு
விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட ஷம்பு எல்லையை ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும் என அரியானா அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்,
கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் போராட்டம் காரணமாக பஞ்சாப், அரியானா, டெல்லி, காஷ்மீரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், ஷம்பு பகுதியில் முள்வேலிகளை அமைத்து அரியானா அரசு தடையை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 5 மாதங்களாக ஷம்பு எல்லை மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பான பொதுநல மனு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எல்லைகள் எப்போதும் மூடியிருக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கை பஞ்சாப், அரியானா மாநில அரசுகள்தான் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதிகள், ஜனநாயக நாட்டில் விவசாயிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குள் செல்வதை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட ஷம்பு எல்லையை ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும் என அரியானா அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.