மராட்டியத்தில் கொரோனா அதிகரிப்பு; பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியம்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.;
புனே,
மராட்டியத்தில் கொரோனா 3வது அலை ஓய்ந்த நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கடந்த மாதம் முதல் தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. இதில் கடந்த மாதம் 26ந்தேதி தினசரி பாதிப்பு 500க்கும் கூடுதலாக பதிவானது.
அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, கொரோனா பாதிப்பு நேற்று ஆயிரம் கடந்துள்ளது. அம்மாநில சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையின்படி தொற்று பாதிப்பு நேற்று 1,134 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24ந்தேதிக்கு பிறகு அதிக பாதிப்பு இதுவாகும். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிசையில் உள்ளனர்.
மராட்டியத்தில் நேற்று முன்தினம் 1,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு 1,134 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, மராட்டிய அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதன்படி, திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் முக கவசங்களை அணிவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.
இதற்காக கூடுதல் முதன்மை செயலாளரான டாக்டர் பிரதீப் வியாஸ், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதம் வழியே பல உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
அதில், ரெயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.