2 ஆட்டோக்கள் மீது கன்டெய்னர் லாரி மோதல்: பெண்கள் உள்பட 7 பேர் சாவு

விஜயநகர் அருகே 2 ஆட்டோக்கள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-06-30 21:05 GMT

பெங்களூரு:-

7 பேர் பலி

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசபேட்டை தாலுகா வத்தரஹள்ளி அருகே உள்ள ேதசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 ஆட்டோக்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாாி ஒன்று 2 ஆட்டோக்கள் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் ஒரு ஆட்டோ லாரியின் அடியில் சிக்கி பலத்த சேதமடைந்தது. மற்றொரு ஆட்டோ, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது.

இதில் 2 ஆட்டோக்களும் அப்பளம் போல நொறுங்கின. இந்த கோர விபத்தில் 2 ஆட்டோக்களிலும் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 ஆண்கள், 5 பெண்கள்

இந்த விபத்ைத பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஒசபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒசபேட்டை போலீசாரும், உயர் போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் 2 ஆண்கள், 5 பெண்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் 2 ஆண்களின் பெயர்கள் மட்டும் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்கள் ஆட்டோ டிரைவர் சியாம், உமேஷ் ஆகும். உயிரிழந்த பெண்களின் பெயர் தெரியவில்லை.

துங்கபத்ரா அணைக்கு...

மேலும் உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் பல்லாரி டவுன் கவுல் பஜார் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் 2 ஆட்டோக்களில் துங்கபத்ரா அணைக்கு சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான லாரி மற்றும் ஆட்டோக்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து ஒசபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

இந்த விபத்து சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்