போக்சோ வழக்கு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன்
போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளனர்.;
பெங்களூரு,
கர்நாடகா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் 54 வயது தாயார், கடந்த மார்ச் 14ம் தேதி அன்று சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், 2 பிரிவுகளின் கீழ் எடியூரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தனது புகாரில், "கல்வி தொடர்பாக தனது மகளுக்கு நீதி கிடைக்க எடியூரப்பாவின் உதவியை நாட அவரது வீட்டிற்கு சென்றோம். அப்போது எங்களது குறைகளை சில நிமிடங்கள் கேட்ட எடியூரப்பா, பின்னர் எனது மகளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக" குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு, பின்னர் சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.ஐ.டி. அதிகாரிகள் எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பதிவுசெய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி. நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே எடியூரப்பா, தனது வழக்கறிஞர்கள் மூலம் சி.ஐ.டி. முன் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கோரியுள்ளார்.
இந்த சம்மன் அனுப்பப்பட்ட சில மணி நேரங்களிலேயே எடியூரப்பா, இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி அம்மாநில ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, கடந்த மாதம் புகார் அளித்த சிறுமியின் தாய் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.