6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.;
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது கடந்த 1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து 41 பேரை கைது செய்தது. பூந்தமல்லி சிறப்பு தடா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது 15 பேர் இறந்து விட்டனர். எஞ்சிய 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு கடந்த 1998-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
7 பேருக்கும் ஆயுள் தண்டனை
பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கவர்னர் உத்தரவிட்டார். தொடர்ந்து எஞ்சிய 3 பேரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து 7 பேரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீடு
இதற்கிடையே பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரை விடுதலை செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
பேரறிவாளன் விடுதலையை அடிப்படையாக வைத்து எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினியும், ரவிச்சந்திரனும் முறையிட்டனர்.
அதை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், 'பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என தெரிவித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்களில் தங்களையும் இணைக்க கோரி மற்ற 4 பேர் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
6 பேரும் விடுதலை
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள்பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 11-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் 6 பேரையும் விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனா.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 'பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு இந்த 6 பேருக்கும் பொருந்தும். மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை இந்த மனுதாரர்கள் அனுபவித்து விட்டனர்.
எனவே, மனுதாரர்களை வேறொரு வழக்கில் தேவைப்படாமல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம்' என தெரிவித்தனர்.
சிறையில் இருந்து விடுவிப்பு
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியை தவிர தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்ப்பை வரவேற்றன.
6 பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே பரோலில் இருந்தனர். ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேர் புழல் சிறையிலும், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து அவர்கள் 6 பேரும் மறுநாளே (12-ந்தேதி) விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு சீராய்வு மனு
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
விடுதலை செய்தது தவறு
6 பேர் மேல்முறையீடு விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு கேட்கவில்லை. இந்த வழக்கில் இடையீடு செய்யவும் வாய்ப்பு அளிக்கவில்லை. குறிப்பாக விடுவிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை.
இயற்கை நீதி கொள்கைகளை கருத்தில் கொள்ளாமல் இவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது தவறானதாகும்.
பேரறிவாளன் உத்தரவை மட்டுமே கொண்டு 6 பேரையும் விடுதலை செய்தது தவறு. பொது ஒழுங்கு, அமைதி, நாட்டின் குற்ற நீதிமுறை ஆகியவற்றில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பான இந்த மனுவில் மத்திய அரசின் வாதத்தை கேட்டிருக்க வேண்டும்.
சர்வதேச தாக்கம்
வெளிநாட்டவர்கள் விடுதலை தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சாசனம் 7-வது அட்டவணையின்படி வெளிநாட்டவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது.
மேற்கண்ட வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயாமல் 6 பேரையும் விடுவித்த உத்தரவு மறுஆய்வு செய்ய தகுதியுடையது. எனவே நவம்பர் 11-ந்தேதி பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த சீராய்வு மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வக்கீல் அரவிந்த்குமார் சர்மா தாக்கல் செய்துள்ளார்.