பா.ஜ.க. கூட்டணிக்கு செல்கிறதா ராஷ்டிரிய லோக் தளம்..? வெளியான பரபரப்பு தகவல்
இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தகவல் பரவியது.;
புதுடெல்லி:
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி தாவல் மற்றும் கட்சி தாவல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரான நிதிஷ் குமார் சமீபத்தில் வெளியேறி, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு சென்றார். இதேபோல் இந்தியா கூட்டணியில் உள்ள வேறு சில கட்சிகளையும் பா.ஜ.க. தன் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ஜாட் சமூகத்தினர் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ள ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை பா.ஜ.க. தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 5 நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் மாநில அமைச்சரவையில் இரண்டு மந்திரி பதவிகள் கொடுப்பதற்கு பா.ஜ.க. முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் , அதனால் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்ற யூகமும் வெளியானது.
ஆனால் இந்த தகவல்களை ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் மாலிக் மறுத்துள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறிய அவர், பொதுத் தேர்தலுக்குத் தயாராகும்படி கட்சியினரை வலியுறுத்தினார். கட்சி தலைவர் ஜெயந்த் சிங் தவறான முடிவு எடுக்கமாட்டார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கடந்த மாதம் தனியாக கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டன. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி 7 தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.