பா.ஜ.க. முன்னாள் மந்திரி காரை திருடிய ஆந்திர வாலிபர் சிக்கினார்

மைசூருவில் பா.ஜனதா முன்னாள் மந்திரி காரை திருடிய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கார்கள், தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Update: 2023-07-31 22:19 GMT

மைசூரு,

பா.ஜ.க. முன்னாள் மந்திரி

கர்நாடக மாநிலம் மைசூரு டவுனில் விஜயநகர் 3-வது ஸ்டேஜியில் வசித்து வருபவர் கோட்டை சிவண்ணா. பா.ஜனதாவை சேர்ந்த இவர் முன்னாள் மந்திரி ஆவார். இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் கடந்த ஜூன் 7-ந்தேதி இரவு, முன்னாள் மந்திரிக்கு சொந்தமான காரை திருடிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், தலையில் ெதாப்பி அணிந்தபடி வந்த மர்மநபர், காரை திருடியதும், காரில் இருந்த பொருட்களை வீசி எறிந்துவிட்டு காருடன் தப்பியதும் தெரியவந்தது. அந்த நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

ஆந்திர வாலிபர் கைது

இந்த நிலையில், மைசூரு வி.வி.புரம் போலீசார் விலைஉயர்ந்த கார்களை திருடி விற்ற நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கைதானவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாபு (வயது 36) என்பதும், இவர் தான் முன்னாள் மந்திரி சிவண்ணாவுக்கு சொந்தமான காரையும் வீடு புகுந்து திருடியதும் தெரியவந்தது.

அத்துடன் மேலும் சில இடங்களில் கார்களை திருடியதும், வீடு புகுந்து நகைகளை திருடியதையும் பாபு தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாபு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் 3 கார்கள், தங்க நகைகள், கைக்கெடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதான பாபுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்