மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க பெண் கல்வி முக்கியம் - நிதிஷ்குமார்

மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்பதில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தி கூறினார்.

Update: 2022-11-12 22:36 GMT

மக்கள் தொகை பெருக்கம் குறைக்க...

இந்தியாவின் முதல் கல்வி மந்திரியான அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளையொட்டி பாட்னாவில் நடந்த விழாவில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

பெண் குழந்தைகள் கல்வி கற்கிறபோது, அது மக்கள்தொகை வளர்ச்சியை தடுக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதையொட்டி அவர் மேலும் கூறியதாவது:-

தேசிய சராசரியை விட குறைவு...

ஒரு பெண் குழந்தை மெட்ரிகுலேசன் படித்திருந்தால் கருத்தரிப்பு விகிதம் 2 சதவீத அளவுக்கு குறைகிறது. அதே நேரத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தால் கருத்தரிப்பு விகிதம் தேசிய அளவில் 1.7 சதவீதம் குறைகிறது.

பீகாரில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் கருத்தரிப்பு விகிதம் 1.6 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியை விட குறைவானது ஆகும். பீகாரில் ஒட்டுமொத்த கருத்தரிப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது.

2011-12-ம் ஆண்டில் கருத்தரிப்பு விகிதம் 4.3 சதவீதமாக இருந்தது. தற்போது ஒட்டுமொத்த விகிதம் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதை 2 சதவீதமாக குறைப்பதற்கு மாநில அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு

இந்த சமூகத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். எல்லா நேரங்களிலும் மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வியை ஆசிரியர்கள் கற்பிக்க முயற்சிக்க வேண்டும். தங்களது கடமைகளை சரிவர செய்யத்தவறுகிற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு சிறப்பான கல்வியைத் தருவதற்கு மாநில அரசு தொடர்ந்து உழைத்து வருகிறது. மொத்த பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீட்டை 21 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்துவது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

'பையில்லா நாள்'

இந்த மாநிலத்தில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் எல்லா அரசு பள்ளிக்கூடங்களிலும் 'பையில்லா நாள்' கடைப்பிடிக்கப்படும் எனவும், அந்த நாளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு பைகளை எடுத்து வரத்தேவையில்லை என மாநில கல்வித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தீபக் குமார் சிங் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்