சைத்ரா குந்தாப்புரா மோசடியில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி

சைத்ரா குந்தாப்புரா மோசடியில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.;

Update:2023-09-15 03:36 IST

பெங்களூரு:

சைத்ரா குந்தாப்புரா மோசடியில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உண்மைகள் வெளிவரும்

இந்து அமைப்பை சேர்ந்த சைத்ரா குந்தாப்புரா, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவில் போட்டியிட டிக்கெட் வாங்கி கொடுப்பதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் இத்தகைய நபர்கள் குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசிப்போம்.

இந்த வழக்கில் விசாரணை நடக்கிறது. இதில் உண்மைகள் வெளிவரும். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த மோசடியில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதோ அவர்களின் பெயர்கள் வெளியே வரட்டும். தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

உடனே நிவாரணம்

ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுப்பார்கள். கர்நாடகத்தில் அதிக இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடினடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்