வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் டெல்லியில் தரையிறக்கம்?

வங்காளதேச விமான படை விமானம், பீகார் மற்றும் உத்தர பிரதேச எல்லையருகே பாட்னா நகரை கடந்து சென்றுள்ளது.

Update: 2024-08-05 11:58 GMT

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் மாணவர்கள் உள்ளிட்டோரின் தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் டாக்கா அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பிரதமர் ஹசீனா மற்றும் அவருடைய சகோதரி இருவரும் கோனோ பாபன் என்ற அரசு இல்லத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி விட்டனர். அவர் இந்தியாவில் தஞ்சமடைவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருடைய ஹெலிகாப்டர் திரிபுராவில் உள்ள அகர்தலா நகருக்கு வந்தடைகிறது என கூறப்பட்டது. ஆனால், அகர்தலாவில் உள்ள அதிகாரிகளோ அல்லது வெளிவிவகார அமைச்சகமோ இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

திரிபுரா உள்துறை செயலாளர் பி.கே. சக்ரவர்த்தி கூறும்போது, இதுபோன்ற தகவல் எதுவும் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.

விமான கண்காணிப்பு வலைதளங்களில் ஒன்றான பிளைட்ராடார்24 வெளியிட்ட செய்தியில், டாக்காவில் இருந்து வங்காளதேச விமான படையை சேர்ந்த விமானம் ஒன்று அடையாளம் தெரியாத பகுதியை நோக்கி செல்கிறது என்றும் மேற்கு வங்காள பகுதியை கடந்து செல்கிறது என்றும் தகவல் தெரிவித்து உள்ளது.

வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனாவை சுமந்து வரும் சி-130 விமானம் டெல்லி ஓடுபாதையில் இன்று மாலை 5.15 மணியளவில் தரையிறங்கும் என கூறப்படுகிறது.

இதன்படி, வங்காளதேச விமான படை விமானம், பீகார் மற்றும் உத்தர பிரதேச எல்லையருகே பாட்னா நகரை கடந்து சென்றுள்ளது. நிலைமையை உயரதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ரேடார்கள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன. தொடர்ந்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

இந்திய பாதுகாப்பு முகமைகளும், AJAX1431 என்ற எண் கொண்ட சி-130 ரக விமானம் எந்த பகுதிக்கு வந்தடைகிறது என கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்