உலகின் மிகப்பெரும் கோவில்.. அயோத்தி ராமர் கோவில் சிறப்புகள்

தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

Update: 2024-01-09 08:28 GMT

பண்டைய காலத்தில் கோசல நாட்டின் தலைநகரமாக அயோத்தி இருந்தது. இந்த கோசல நாட்டின் முதல் மன்னர் இக்ஷ்வாகு. இவர்தான் சூரிய வம்சத்தை நிறுவியதாக புராணங்கள் சொல்கின்றன. கோசல தேசம் என்பது தற்போதைய உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த கோசல நாட்டின் மன்னராக இருந்த தசரதனின் மகன்தான் ராமர்.

ராமர் ஒரு மன்னர் மட்டுமல்லாமல், விஷ்ணு பகவானின் ஒரு அவதாரமும் ஆவார். இந்தியாவில் ராமரை ஏராளமானோர் வழிபடுகின்றனர். அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் என நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கின் முடிவில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, அங்கு மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகளை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேக்த்ரா என்ற அறக்கட்டளை செய்து வருகிறது. இங்கு கோவில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த கோவில் தரைத்தளத்துடன் சேர்த்து 3 தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை தரைதளமும், முதல் தள பணிகளும் முடிந்து உள்ளன. 2-ம் தளம், கோவிலை சுற்றி கட்டப்பட உள்ள இதர சன்னதிகள் மற்றும் 161 அடி உயர கோபுரம் ஆகியவை இன்னும் கட்டப்பட உள்ளன. தற்போது தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

கோவில் வரைபடம் தயாரித்த சோமபுரா சந்திராகாந்த் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 2.77 ஏக்கர் இடம் கோவில் கட்ட கிடைத்தது. அந்த இடத்தை சுற்றியுள்ள இடங்கள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேக்த்ரா அறக்கட்டளையால் வாங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 108 ஏக்கர் பரப்பளவில் அயோத்தி ராமர் கோவிலை நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை சுமார் 67.3 ஏக்கர் நிலம் மட்டுமே வாங்கப்பட்டு உள்ளது. அதில் கோர்ட்டு ஒதுக்கிய 2.7 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலும், அதனை சுற்றி 2.8 ஏக்கரில் பிற சன்னதிகளும் கட்டப்படுகின்றன. மொத்தம் 70 ஏக்கர் நிலத்தில் 5.57 ஏக்கர் முழுவதும் கோவில் கட்டுமானங்கள் அமைகிறது. உலகிலேயே அங்கோர்வாட் கோவில் (406 ஏக்கர்), அமெரிக்கா அக்ஷர்தாம் கோவில் (186 ஏக்கர்), தமிழக ஸ்ரீரங்கம் கோவில் (156 ஏக்கர்), வேலூர் லட்சுமி நாராயணி தேவி கோவில் (100 ஏக்கர்) ஆகியவை நிலப்பரப்பில் பெரிய கோவில்கள் ஆகும். ஆனால் கோவில் கட்டுமான பரப்பளவு குறைவு. உலகத்திலேயே 5.7 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதும் கோவில் கட்டிடங்களாக அமைவது அயோத்தி ராமர் கோவிலில் தான். எனவே உலகிலேயே மிகப்பெரும் கோவிலாக இது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

அயோத்தி ராமர் கோவில் முழு வளாக மாதிரி படம்.

இலங்கை மன்னன் ராவணனை, ராமர் வதம் செய்துவிட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடன் அயோத்திக்கு திரும்பும்போது மக்கள் ஊர் முழுவதும் விளக்கேற்றி கொண்டாடினர். இந்த நாளைதான் தீபாவளியாக வடஇந்தியாவில் கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல் தற்போது அயோத்தி ராமர் கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நாளை இன்னொரு தீபாவளி என்று அயோத்தி மக்கள் கூறுகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் குறித்து எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில், கோவில் வளாகத்தில் 2 ஆயிரம் அடியில் கீழ் காலப் பெட்டகம் (Time Capsule) வைக்கப்படுகிறது. இந்த பெட்டகத்திற்குள் ராமர் பற்றிய வரலாறு, கோவில் கட்டுமானம் போன்ற விரிவான தகவல்கள் செம்பு பட்டயத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்