அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் '21 ஜி.பி. டேட்டா' பயன்படுத்தும் இந்தியர்கள்
தொலைத்தொடர்பு நெட்வொர்க் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119 கோடியாக அதிகரித்து இருப்பதாக டிராய் தலைவர் தெரிவித்தார்.;
திருப்பதி,
இந்தியாவில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இன்றி அனைவரையும் இந்த செல்போன் அடிமைப்படுத்தி இருக்கிறது.
வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பல்வேறு வசதிகளுடன், இணையதளத்தின் வேகத்தையும் அதிகரித்து நவீனப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சார்பில் சுகாதாரத்துறையில் 5ஜி பயன்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்று நேற்று திருப்பதியில் நடந்தது. இதில் டிராயின் தலைவர் அனில்குமார் லகோட்டி கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, 'இந்தியாவில் தொலைத்தொடர்பு நெட்வொர்க் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த 2014 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,415 சதவீதமாக அதிகரித்து, 92 கோடியாக இருக்கிறது' என்றார்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறிய டிராய் தலைவர், இந்தியாவில் செல்போன் சந்தாதாரர் ஒருவர் மாதத்துக்கு சராசரியாக 21.23 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.