சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சத்தீஷ்காரின் 20 தொகுதிகளுக்கு கடந்த 7 ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கும், சத்தீஷ்காரின் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 71.16 சதவீத வாக்குகளும், சத்தீஷ்காரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
சத்தீஸ்கரில் 2ம் கட்டமாக 70 தொகுதிகளுக்கான நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது
வாக்குப்பதிவு ; மாலை 5 மணி நிலவரம்
சத்தீஷ்கார்: 67.34% சதவிகிதம்
மத்திய பிரதேசம்: 71.03% சதவிகிதம்
வாக்குப்பதிவு ; மதியம் 3 மணி நிலவரம்
சத்தீஷ்கார்: 55.31% சதவிகிதம்
மத்திய பிரதேசம்: 60.52% சதவிகிதம்
மத்தியப் பிரதேச மந்திரியும், பாஜக மாநில தலைவருமான நரோத்தம் மிஸ்ரா, டாடியாவில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
"தாமரை சின்னம் உள்ள பொத்தானை (EVMல்) அழுத்தினால், இந்தியாவில் கொண்டாட்டங்கள் நடைபெறும். தேச நலனை மனதில் கொண்டு 'தாமரை' சின்னம் உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என கூறினார்.
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான நகுல்நாத்தை, சிந்த்வாராவின் பரரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
வாக்களித்த பிறகு, சத்தீஷ்கார் முதல்-மந்திரியும் துர்க் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான பூபேஷ் பாகேல் கூறுகையில், எங்கள் இலக்கு 75 இடங்களை தாண்டுவதுதான் என்றார்.
மத்திய பிரதேசத்தின் திமானி சட்டமன்ற தொகுதியில் உள்ள 147-148 என்ற வாக்குச்சாவடியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் கற்களை வீசி மோதிக் கொண்டனர். இந்த மோதலில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
மோதல் வெடித்த வாக்குச்சாவடியில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வாக்குச்சாவடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் ஜனநாயக உரிமை என்று சத்தீஷ்கர் கவர்னர் பிஸ்வபுஷன் ஹரிசந்தன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அனைத்து குடிமக்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றுதான் ஜனநாயகம் விரும்புகிறது. வாக்களிப்பதன் மூலம், தங்களுக்கு மாநிலத்திலும் மத்தியிலும் யாருடைய ஆட்சி வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க முடியும். எனவே நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
சத்தீஷ்காரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி அங்கு 19.65 % வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், மத்திய பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 27.86 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.