இரண்டு நாள் பயணம்.. பூடான் மன்னர் நாளை இந்தியா வருகிறார்
பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை பூடான் மன்னர் சந்தித்து பேச உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா-பூடான் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் பூடான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் நாளை இந்தியா வருகிறார்கள். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை பூடான் மன்னர் சந்தித்து பேச உள்ளார்.
இந்தியாவும் பூடானும் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. பூடான் மன்னரின் இந்த சுற்றுப்பயணமானது, இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்வதற்கும், பல்வேறு துறைகளில் கூட்டாண்மையை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் வாய்ப்பை வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.