கிரேட்டர் நொய்டா போராட்டத்திற்கு சென்ற விவசாய சங்க தலைவர் தடுத்து நிறுத்தம்- பரபரப்பு
அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு மற்றும் பிற சலுகைகள் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அலிகார்:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதற்கான இழப்பீடு வழங்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியை நோக்கி பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்தனர். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த சுமார் 5,000 விவசாயிகள், கவுதம் புத்த நகரில் திரண்டனர். தங்களின் கோரிக்கைகளை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் பேரணியை தொடங்க உள்ளதாக கூறி உள்ளனர். அவர்களை எல்லையில் தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் விவசாய சங்க தலைவர்களை சந்திப்பதற்காக பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு.) தலைவர் ராகேஷ் டிகாயித் இன்று புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரை அலிகார் மாவட்ட போலீசார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். பின்னர் ராகேஷ் டிகாயித் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு தப்பால் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி விவசாய சங்க தலைவர் டிகாயித் கூறுகையில், "நொய்டாவுக்குச் செல்வதற்காக கவுதம் புத்த நகரில் திரண்டுள்ள விவசாயிகளை அங்கேயே தங்க வைக்குமாறு வற்புறுத்தி போலீசார் தடுக்கின்றனர். எவ்வளவு காலம் எங்களைக் காவலில் வைப்பீர்கள்? எங்களை அடைத்து வைத்தால், யாருடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்? அதிகாரிகளின் இந்த அணுகுமுறை தொடர்ந்தால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும்" என எச்சரித்தார்.
பி.கே.யு. தொண்டர்கள் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்களை இன்று (புதன்கிழமை) கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜீரோ பாயின்ட்டில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக சங்கத்தின் இளைஞர் பிரிவு தலைவர் அனுஜ் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜீரோ பாயின்ட்டில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று கூடினர். கடந்த காலங்களில் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு மற்றும் பிற சலுகைகள் வழங்க வலியுறுத்தியும், உள்ளூர் அதிகாரிகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் லக்ஷ்மி சிங் தெரிவித்தார்.