'121 பேர் கூட்டநெரிசலில் சிக்கி இறந்ததற்கு விதியே காரணம்' - போலே பாபா சாமியார்
பிறக்கும் ஒவ்வொருவரும், இறுதியில் இறக்கத்தான் வேண்டும். மரணம் என்பது விதி என்று போலே பாபா சாமியார் கூறியுள்ளார்.;
ஆக்ரா,
கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் இறந்ததற்கு விதியே காரணம் என்று போலே பாபா சாமியார் கூறி இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற இடத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 121 பேர் பலியானது நினைவு இருக்கலாம். கடந்த 2-ந்தேதி இந்தச் சோகம் நடந்தது.
போலே பாபா என்ற சாமியாரின் பேச்சை கேட்க பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்த கூட்டத்தில்தான் இந்த பரிதாபம் நடந்தது.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி சாமியார் போலே பாபா ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் காஸ்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ''பிறக்கும் ஒவ்வொருவரும், இறுதியில் இறக்கத்தான் வேண்டும். மரணம் என்பது விதி'' என்றார்.
''தவிர்க்க முடியாத ஒன்று நடப்பதை யார்தான் தடுக்க முடியும்?'' என்று கேள்வி எழுப்பிய அவர், ''உலகுக்கு வந்த ஒவ்வொருவரும் ஒருநாள் வெளியேறத்தான் வேண்டும்'' என்றும் கூறினார்.
அதே நேரம், சம்பவம் நடந்தபோது கூட்டத்தில் விஷமிகள் புகுந்து விஷவாயுவை பரப்பியதை சிலர் நேரில் பார்த்து இருக்கிறார்கள் என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த சதி வேலை நடந்ததாகவும் சாமியார் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாமியார் போலே பாபாவின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அந்த வழக்கில் சாமியாரின் பெயர் இன்னமும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.