டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 6-வது நாளாக இணைய சேவை முடக்கம்: ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 6-வது நாளாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.;

Update:2022-11-28 23:09 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நாட்டிலேயே அதிக மருத்துவ சேவைகளை அளிக்கும் அரசு ஆஸ்பத்திரியாக உள்ளது. இங்கு ஆண்டுக்கு 15 லட்சம் பேர் வெளிநோயாளிகளாகவும், சுமார் 80 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.

இங்கு நோயாளி பதிவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் கணினி பயன்பாடே முதன்மையாக உள்ளது. இதனால் பணிகள் வேகமாக நடக்கும். இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி திடீரென இணைய சேவை இங்கு பாதிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு கணினி சீட்டு வழங்க முடியவில்லை. அனைத்து எழுத்து வேலைகளும் கைகளாலேயே நடந்தது. இதனால் அனைத்து கவுண்ட்டர்களிலும் நீண்ட தூரத்துக்கு வரிசை காணப்பட்டது.

இணைய சேவை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, மர்மநபர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் கணினி பயன்பாட்டுக்கான சர்வரை முடக்கிவிட்டதாக தெரியவந்தது. சர்வர் முடக்கம் குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மென்பொருள் மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் தொடர்ந்து ஆறாவது நாளாக எய்ம்ஸ் சர்வர் செயலிழந்துள்ளதால், நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு நாள்களில் மட்டும் 3 முதல் 5 கோடி நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை செயலிழக்கச் செய்த ஹேக்கர்கள் ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்