மணிப்பூர் வன்முறை: இந்திய-மியான்மர் எல்லையில் வான்வழி கண்காணிப்பு

மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் விரைவில் வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

Update: 2023-05-06 16:39 GMT

image courtesy: PTI

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, புகலிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் பாதுகாப்புப் படையினர் விரைவில் வான்வழி கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளனர். வான்வழி கண்காணிப்புக்கு ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆளில்லா வான்வழி வாகனங்கள் இந்த பகுதிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை முதல், ராணுவம் சீட்டா ஹெலிகாப்டர்கள் மூலம் பல சுற்று வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டது.

எல்லைக்கு அப்பால் உள்ள முகாம்களில் தங்கி மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் கிளர்ச்சிக் குழுக்களை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த கண்காணிப்பின் நோக்கமாக இருப்பதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்