அன்னபாக்ய திட்டத்தில் இம்மாதமே 10 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை; மந்திரி கே.எச்.முனியப்பா தகவல்
அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் இம்மாதமே 10 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக மந்திரி கே.எச். முனியப்பா தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
உணவுத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா பெங்களூரு விதானசவுதாவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறிய
தாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது 5 கிலோ அரிசியும், 5 கிலோ அரிசிக்கு பதில் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. பணத்திற்கு பதில் அரிசி கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் கர்நாடகத்திற்கு தேவையான அரிசியை வழங்க முன்வந்துள்ளது.
ஆனால் அங்கிருந்து அரிசி கொண்டு வருவதற்கு கூடுதல் செலவாவதால், அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் ரூ.34-க்கு ஒரு கிலோ அரிசி வழங்க சம்மதித்துள்ளது. அந்த மாநிலங்களிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்து அன்னபாக்ய திட்டத்தில் பணத்திற்கு பதில் அரிசியே வழங்கப்படும். இந்த மாதத்திலேயே (அக்டோபர்) 10 கிலோ அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
1.08 கோடி பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களில் 4 கோடி பேருக்கு 5 கிலோ அரிசிக்கு தலா ரூ.170 வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதமே பணத்திற்கு பதில் அரிசியே வழங்க உணத்துறை முன்வந்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அரிசி வழங்க முன்வந்துள்ள மாநிலங்களுடன் அதிகாரிகள் நேரடி தொடர்பில் இருந்து வருகின்றனர்.
அரிசி கொள்முதலுக்கு கூடிய விரைவில் டெண்டர் கோரப்படும். ஏனெனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்க 2.40 லட்சம் மெட்ரிக் டன் தேவையாகும். அரிசி கொள்முதலுக்கு நிதித்துறையின் அனுமதி பெற வேண்டியதில்லை. முதல்-மந்திரியின் உத்தரவின்பேரில் பிற மாநிலங்களிடம் நேரடியாகவே அரிசி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கே.எச்.முனியப்பா கூறினார்.