அதானி நிறுவனம் மீது மீண்டும் குற்றச்சாட்டு - பங்குகள் விலை வீழ்ச்சி
வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை வாங்கி விற்று 2 பேர் கொள்ளை லாபம் ஈட்டியதாக சர்வதேச அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. அதனால், அதானி குழும பங்குகள் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு, கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது.
அதில், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், பங்குச்சந்தைகளில் முறைகேட்டில் ஈடுபட்டு பங்குகள் விலையை உயர்த்தியதாக குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழுவை நியமித்தது. அக்குழுவின் அறிக்கை, அதானி குழுமத்துக்கு சாதகமாக அமைந்தது. பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'யின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதானி குழுமத்துக்கு எதிரான 24 பிரச்சினைகளில் 22 பிரச்சினைகளில் விசாரணை முடிந்ததாக 'செபி' கூறியுள்ளது.
இந்நிலையில், மற்றொரு வெளிநாட்டு அமைப்பு, அதானி குழுமம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. அமைப்பு ரீதியான குற்றங்கள் மற்றும் ஊழலை கண்டறிந்து வெளியிடும் 'ஓ.சி.சி.ஆர்.பி.' என்ற அமைப்பு இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்புக்கு இந்தியாவை விமர்சிக்கும் தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் ராக்பெல்லர்ஸ் பிரதர்ஸ் நிதியம் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் 2-ம் பாகமாக கருதப்படும் அந்த அறிக்கையில், ஓ.சி.சி.ஆர்.பி. கூறியிருப்பதாவது:-
வெளிநாட்டு நிறுவனம் மூலம் அதானி பங்குகளை மறைமுக முதலீட்டாளர்கள் வாங்கி விற்ற 2 நிகழ்வுகளை எங்கள் விசாரணை குழு கண்டுபிடித்துள்ளது.
நாசர் அலி ஷபன் அலி, சாங் சுங்-லிங் ஆகியோர், அதானி குழுமத்திலும், அதானியின் அண்ணன் வினோத் அதானியின் நிறுவனங்களிலும் இயக்குனர்களாகவும், பங்குதாரர்களாகவும் இருந்தவர்கள். அதானி குடும்பத்துடன் நீண்டகால வர்த்தக உறவு வைத்திருப்பவர்கள்.
அவர்கள் மொரீஷியஸ் நாட்ைட சேர்ந்த மர்மமான முதலீட்டு நிறுவனம் மூலம் அதானி குழும பங்குகளை பல ஆண்டுகளாக வாங்கி, விற்று வந்துள்ளனர். இப்படி கோடிக்கணக்கான டாலர் முதலீடு செய்துள்ளனர். அதன்மூலம் கணிசமான லாபம் பார்த்துள்ளனர்.
நாசர் அலி ஷபன் அலி, சாங் சுங்-லிங் ஆகிய இருவரும் அதானி குழும உரிமையாளர்கள் சார்பில் செயல்பட்டதாக கருதலாமா என்று கேட்கிறோம். அப்படியானால், சட்டம் அனுமதித்த 75 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்குகளை அதானி குடும்பம் தங்களுக்கு சொந்தமாக வைத்திருப்பதாக அர்த்தம். இது, இந்திய பங்குச்சந்தை சட்டத்தை மீறிய செயல்.
அலி, சாங் ஆகிய இருவரும் முதலீடு செய்த பணம், அதானி குடும்பத்திடம் இருந்து பெற்ற பணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், அதானி குழும பங்குகளில் அவர்கள் அதானி குடும்பத்துடன் ஒருங்கிணைந்துதான் முதலீடு செய்ததாக ஆதாரம் உள்ளது.
நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் 8 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு 260 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், இக்குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. அக்குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த குற்றச்சாட்டுகள், ஒரு மறுசுழற்சி போன்றது. ஜார்ஜ் சோரஸ் போன்றவர்களின் நிதியுதவியுடன், வெளிநாட்டு ஊடகங்களின் துணையுடன், ஹிண்டன்பர்க் அறிக்கையை மீண்டும் புதுப்பிக்க கூட்டு முயற்சி நடக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு முடித்துக் கொள்ளப்பட்ட வழக்குகள் அடிப்படையில்தான் இக்குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். அவையெல்லாம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை அடுத்தடுத்து விசாரித்து, எந்த தவறும் நடக்கவில்லை என்று தீர்ப்பளித்த புகார்கள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய குற்றச்சாட்டுகளால், பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது.
மும்பை பங்குச்சந்தையில், அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 4.43 சதவீதம் குறைந்தது. அதானி பவர் நிறுவன பங்குகள் 3.82 சதவீதமும், அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 3.56 சதவீதமும், அதானி எனர்ஜி சொல்யூசன்ஸ் பங்கு 3.18 சதவீதமும், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பங்கு 2.75 சதவீதமும் வீழ்ச்சி அடைந்தன.
அதானி டோட்டல் கியாஸ், என்.டி.டி.வி., அதானி வில்மர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்தன.