ஐஸ்கிரீம் வாங்க சென்றபோது சோகம்: டிராக்டர் மோதி சிறுவன் பலி

ஐஸ்கிரீம் வாங்க சென்றபோது டிராக்டர் மோதி, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-07 21:38 GMT

பெங்களூரு:

ஐஸ்கிரீம் வாங்க சென்றபோது டிராக்டர் மோதி, சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் சாவு

பெங்களூரு சி.கே.பாளையா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு புவன் என்ற 4 வயது மகன் இருந்தான். அந்த சிறுவன், தனது சகோதரர் ஒருவருடன் அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்றான். இருவரும் ஐஸ்கிரீம் வாங்கிவிட்டு வீட்டை நோக்கி சாலையோரம் நடந்து வந்தனர். அப்போது அந்த வழியாக தண்ணீர் டேங்கருடன் டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த டிராக்டர், சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் புவன் சாலையில் விழுந்தான். அப்போது சிறுவன் மீது டிராக்டர் ஏறி, இறங்கியது. இதில் சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே டிராக்டர் டிரைவர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கேமரா காட்சிகள்

இது குறித்து பன்னரகட்டா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஐஸ்கிரீம் வாங்குவதற்கு வந்த சிறுவன், டிராக்டர் மோதி உயிரிழந்ததும், விபத்து நடந்தபோது டிராக்டர் டிரைவர் மது அருந்தி இருந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்