இலையில் இனிப்பு இடம்பெறாததால் நின்றுபோன திருமணம்... தாலி கட்டும் முன்பே கசந்துபோன இரு மனம்
திருமண விருந்தில் சம்பிரதாயப்படி முதலில் சாப்பாட்டு இலையில் இனிப்பு இடம்பெறுவது வழக்கம்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஹனகல்லு கிராமம் சித்தார்த்தா படாவனே பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளம்பெண். இவருக்கும், துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று(மே 6-ந் தேதி) நடைபெற இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் 5-ந் தேதி சோமவார்பேட்டை டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக மணமகன் வீட்டார் அந்த திருமண மண்டபத்திற்கு வந்தனர். மணமக்கள் மேடையில் இருந்த நிலையில், விருந்து நடைபெறும் இடத்தில் திடீரென தகராறு ஏற்பட்டது. அதாவது திருமண விருந்தில் சம்பிரதாயப்படி முதலில் சாப்பாட்டு இலையில் இனிப்பு இடம்பெறுவது வழக்கம். ஆனால் இனிப்பு வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும், அதனால் தங்களது சம்பிரதாயம் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி மணமகன் வீட்டார் தகராறில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பெண் வீட்டாரும், பதிலுக்கு தகராறில் ஈடுபட்டனர். இதனால் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் மணமகன் வீட்டார் இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டனர். பெண் வீட்டைச் சேர்ந்த ஒருதரப்பினர் மணமகன் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விடிய, விடிய நடந்த பேச்சுவார்த்தையில் முகூர்த்த நேரம் நெருங்கியதும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயார் என்று மணமகன் தெரிவித்தார்.
அதுவரை பொறுமையாக இருந்து நடந்தவற்றை கவனித்து வந்த மணமகள், திடீரென போர்க்கொடி தூக்கினாள். திருமணத்திற்கு முன்பே ஒரு சிறிய விஷயத்துக்காக இவ்வளவு பிரச்சினை என்றால், திருமணத்திற்கு பின்பு தன்னால் நிம்மதியாக வாழ முடியாது என்று கூறிய மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
அவரை அவருடைய பெற்றோரும், குடும்பத்தினரும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சித்தும் மணப்பெண் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். பின்னர் அவர் நடந்த சம்பவங்கள் குறித்து சோமவார்பேட்டை போலீசில் புகார் செய்தார். திருமண ஏற்பாடுக்கான செலவுகள் அதிகமாக செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் தன்னுடைய பெற்றோர் நஷ்டம் அடைந்திருப்பதாகவும், அதனால் அந்த செலவுகளை மணமகன் வீட்டார் தர வேண்டும் என்றும் மணப்பெண் கூறினார்.
இருதரப்பினரிடமும் விசாரணை நடத்திய போலீசார், மணப்பெண் கேட்டபடி திருமண ஏற்பாடுக்கான செலவுகளை மணமகன் வீட்டாரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர். அதையடுத்து இருகுடும்பத்தினரும் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.