சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடி செலவு

கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.440 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2023-05-11 21:09 GMT

பெங்களூரு:-

ரூ.440 கோடி செலவு

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்திருந்தது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுககு தேவையான உணவு, தண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக பஸ்கள் என பல்வேறு வேலைகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

இந்த நிலையில், 224 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் சுமார் ரூ.440 கோடியை செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.1.96 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருக்கிறது.

2013-ல் ரூ.160 கோடி

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்காக ரூ.394 கோடி செலவு செய்யப்பட்டு இருந்தது. ஒரு தொகுதிக்கு ரூ.1¾ கோடி செலவாகி இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்குச்சாவடி அமைத்தல், ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.160 கோடியை தேர்தல் ஆணையம் செலவு செய்திருந்தது. ஒரு தொகுதிக்கு மட்டும் ரூ.75 லட்சம் செலவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த தேர்தலில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தற்போது ரூ.440 கோடி செலவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான செலவை கர்நாடக அரசு தான் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருந்தது. அந்த பணத்தை தான் தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்காக செலவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்