4 வயது சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை- மீண்டும் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு
4 வயது பெண் குழந்தையிடம் தந்தை தவறாக நடந்து கொண்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:-
போலீசாருக்கு உத்தரவு
பெங்களூருவை சேர்ந்த கணவன்-மனைவி. அவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் தனது மகளிடம் கணவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு அந்த பெண் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதில் சரியான முறையில் போலீசார் விசாரிக்கவில்லை என்றும், மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரி அந்த பெண், கோர்ட்டில் புகார் அளித்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவில் கூறி இருப்பதாவது:-
பறிமுதல் செய்யவில்லை
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு தேவையான ஆவணங்கள் வேண்டுமென்றே கைவிடப்பட்டுள்ளது. இது தரமற்ற விசாரணையாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரை விசாரணை அதிகாாியிடம் கூறியுள்ளது. ஆனால் அதுகுறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை.
குற்றம்சாட்டபட்டவருக்கு எதிரான முக்கியமான ஆவணங்களை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. டாக்டரிடம் அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இல்லை. புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை அதிகாரி விசாரிக்கவில்லை. மேலும் ஆபாச படங்கள் வைக்கப்பட்டிருந்த மடிகணினி மற்றும் ஐ-பேட் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்யவில்லை. அந்த ஐ-பேட் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதுகுறித்து அறிக்கை இன்னும் வரவில்லை.
விசாரணை நடத்தவில்லை
மேலும் எந்த இடத்தில் இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை. தாத்தா-பாட்டிகள், உறவினரிடமும் விசாரணை நடத்தவில்லை. அந்த சிறுமி அடைந்த வேதனை குறித்து மனநல டாக்டர் வழங்கிய அறிக்கையை சேர்க்கவில்லை. அதனால் இந்த அம்சங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கீழமை கோர்ட்டு காத்திருக்க வேண்டும். போலீசார் புதிதாக விசாரணை நடத்தி அறிக்கை வழங்கும் வரை இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தக்கூடாது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு கீழமை கோர்ட்டு விசாரணையை நடத்தலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.