தீர்த்தஹள்ளி அருகே பட்டப்பகலில் துணிகரம் வீடு புகுந்து ரூ.3½ லட்சம் நகை, பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தீர்த்தஹள்ளி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.3½ லட்சம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-05-25 16:06 GMT

சிவமொக்கா;


ரூ.3½ லட்சம் நகை,பணம் திருட்டு

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா ஹொன்னேகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர், நேற்றுமுன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் பட்டபகலில் மர்மநபர்கள், மஞ்சுநாத் வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் மர்மநபர்கள் வீட்டில் பீரோவை திறந்து அதில் இருந்த தங்கம், வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றுவிட்டனர்.

இதையடுத்து திரும்பி வந்த மஞ்சுநாத், வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்குள் சென்றார். அப்போது பீரோ திறந்து கிடந்து அதில் இருந்த நகை, பணம் திருட்டு போய் இருந்தது. 90 கிராம் தங்கநகை, சில வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும். அப்போது தான் அவருக்கு மர்மநபர்கள் வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர், தீர்த்தஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாயை வரவழைத்து சோதனை நடத்தினர். நாய் மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தீர்த்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்