விமானத்தில் கடத்திய ரூ.33½ லட்சம் தங்கம் சிக்கியது
மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.33½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:-
மேற்கு வங்காளம்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 2-வது முனையம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2-வது முனையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்காளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடமும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் மட்டும் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அந்த பயணியின் உடைமைகளை பரிசோதனை செய்த போது தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக 600 கிராம் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்க கட்டிகள்
அவற்றின் மதிப்பு ரூ.33½ லட்சம் ஆகும். அந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.