சத்தீஸ்கர்: வெடிபொருட்களுடன் நக்சலைட்டுகள் கைது
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வெடிபொருட்களுடன் பதுங்கி இருந்த 4 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தண்டிவாடா மாவட்டத்தின் கமர்குடா மற்றும் ஹண்டசவ்லி பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 4 பேரும் நக்சலைட்டு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 4 பேரையும் கைது செய்த பதுகாப்பு படையினர் அவர்களிடமிருந்து 3 கிலோ வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.