சவுரி சவுரா: வீரமரணம் அடைந்து மண்ணில் கலந்த இந்தியர்களின் ரத்தம் ஊக்கம் தருகிறது; பிரதமர் மோடி பேச்சு
சவுரி சவுரா சம்பவத்தில் வீரமரணம் அடைந்த இந்தியர்கள் வரலாற்று பக்கத்தில் முக்கியத்துவம் பெறவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.;
புதுடெல்லி,
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திரத்திற்காக போராடிய இந்தியர்களில் 172 பேர் தூக்கில் போடப்பட்டு வீரமரணம் அடைந்தனர். அவர்களை நினைவுகூர்ந்திடும் சவுரி சவுரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான விழாவை காணொலி காட்சி வழியே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசி வருகிறார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் சவுரி சவுரா சம்பவம் திருப்புமுனை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு வகிக்கிறது. வர்த்தகம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, பிரித்து ஆளும் சூழ்ச்சியை கொண்டு பல்வேறு சிறு, குறு நில மன்னர்களை சிறை பிடித்தும், கப்பம் கட்ட சொல்லியும் வற்புறுத்தின.
அவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்டவர்களுடன் இணக்கமுடனும், அத்துமீறியவர்களை அடக்கும் முறையில் கைதேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலேய அரசு இந்தியாவில் ஆட்சி செய்து பல சட்டங்களை இயற்றியது. அவற்றில் ரவுலட் சட்டமும் ஒன்று.
இந்தியர்களை நசுக்கும் அதிகாரம் படைத்த இச்சட்டத்திற்கு எதிராக கடந்த 1922ம் ஆண்டு பிப்ரவரி 4ந்தேதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வன்முறையற்ற, அமைதி வழியிலான அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு உட்பட்ட சவுரி சவுரா பகுதியில் நடந்த பிரிட்டிஷாருக்கு எதிரான இந்த ஒத்துழையாமை இயக்கத்தில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலியானதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அதற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 23 போலீசார் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலால் ஆங்கிலேய அரசாட்சியின் அடித்தளம் அசைந்தது. சுதந்திர போராட்ட எழுச்சிக்கு இந்த சம்பவம் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இதன்பின் 228 இந்தியர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர்களில் 172 பேர் பிரிட்டிஷாரால் தூக்கில் போடப்பட்டனர்.
சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1982ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஷாகீத் ஸ்மராக் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து கடந்த 1993ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையில் நினைவகம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதன் நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்படும் என உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் கூறினார். நாட்டின் இளம் தலைமுறையினரின் எண்ணத்தில் தேசப்பற்று உணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக ஓராண்டிற்கு இந்த விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டது.
இதனை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் சவுரி சவுரா நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கான தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதற்கான விழாவை பிரதமர் மோடி இன்று காலை காணொலி காட்சி வழியே தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்பொழுது, சவுரி சவுரா சம்பவம், காவல் நிலையம் மீது தீ வைத்ததுடன் நின்றுவிடவில்லை. இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வரும் விசயம் பெரியது. பல்வேறு காரணங்களால், இது ஒரு சிறிய சம்பவம் போல் காணப்படுகிறது. ஆனால் அதன் உள்அர்த்தம் பற்றி நாம் காண வேண்டும்.
அந்த நெருப்பு காவல் நிலையத்துடன் நின்று விடாமல், பொதுமக்களின் இருதயங்களிலும் மூண்ட தீ ஆகும். சவுரி சவுரா சம்பவத்தில் வீரமரணம் அடைந்தவர்களை பற்றி துரதிர்ஷ்டவசம் ஆக அதிகம் பேசப்படாமல் போய்விட்டது.
ஆனால் அவர்களை பற்றி அதிகம் பேசியிருக்க வேண்டும். அத்துடன், வரலாற்று பக்கங்களில் அவர்களுக்கான முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. அவர்களுடைய ரத்தம் நமது தேசத்தின் மண்ணில் கலந்துள்ளது. நம்மை ஊக்குவித்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.