ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

திருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.;

Update:2020-11-24 05:34 IST
ஆலந்தூர், 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருப்பதி செல்கிறார். இதற்காக காலை 6.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் முடிந்து, திருப்பதியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் மீண்டும் மாலை 5.35 மணிக்கு சென்னை வருகிறார். அப்போது அவரை வரவேற்று, வழியனுப்பி வைக்கப்படுகிறது. மாலை 5.45 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரவில்லை. ஆனாலும் மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஜனாதிபதியின் விமானம் வந்து நிற்கும் இடம், அவா் பயணம் செய்ய உள்ள ஹெலிகாப்டா்கள் நிற்கும் பகுதிகள் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

பழைய விமான நிலையத்தில் பணி மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஊழியா்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டைகள் இல்லாதவா்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. சென்னை பழைய விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்