கர்நாடகத்தில் மழை பாதித்த மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா நாளை சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் மழை பாதித்த மாவட்டங்களில் முதல்-மந்திரி எடியூரப்பா நாளை (செவ்வாய்க்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மழை பாதித்த பகுதிகளை அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.;

Update: 2020-08-24 10:41 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

கடந்த 2 வாரங்களாக பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங் களில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 5,500 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்கள் நாசமாகி உள்ளது.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். அதன்படி, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி எடியூரப்பா மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலை பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து அவர், பெலகாவி சாம்ரா விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

சாம்ரா விமான நிலையத்தில் வைத்தே பெலகாவி மற்றும் தார்வார் மாவட்ட பொறுப்பு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்துகிறார். அந்த 2 மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டு அறிந்து கொள்கிறார். அதன்பிறகு, காலை 11.15 மணியளவில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக மழையால் பாதித்த பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்டங்களை பார்வையிடுகிறார்.

அந்த மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்பு மதியம் 12.45 மணியளவில் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அலமட்டி அணைக்கட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா செல்கிறார். இந்த அணை நிரம்பியதை தொடர்ந்து அங்கு அவர் வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தி பாகினா சமர்ப்பணம் செய்கிறார்.

அதன்பிறகு மதியம் 1 மணியளவில், விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக் மாவட்டங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 2.30 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டரில் பறந்தபடி விஜயாப்புரா, பாகல்கோட்டை, கதக் மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளை (விடுபட்ட பகுதிகள்) முதல்-மந்திரி எடியூரப்பா பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

எடியூரப்பாவுடன், வருவாய்த்துறை மந்திரி அசோக்கும் மழை பாதித்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். மழை-வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், முதல்-மந்திரி நேரில் பார்வையிடவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்த நிலையில் நாளை எடியூரப்பா மழை பாதித்த பகுதிகளை பார்வையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்