ஐ.என்.எக்ஸ்.மீடியா முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Update: 2020-06-03 21:30 GMT
புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இது தொடர்பாக சென்ற ஆண்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்தனர். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இது போல ஏற்கனவே கார்த்தி சிதம்பரமும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் தனிக்கோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய் குமார் கோர்ட்டில் மின்னணு முறையில் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளதாகவும், மீண்டும் நீதிமன்றங்கள் சாதாரணமாக இயங்க ஆரம்பித்த பின்னர் அச்சு நகல்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் எஸ்.எஸ்.பாஸ்கரராமன் உள்ளிட்டோர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்