பீகாரில் இணைப்பு அறுந்து இரண்டாக பிரிந்த சரக்கு ரெயில்

சரக்கு ரெயிலின் பெட்டிகளிடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது.

Update: 2024-12-14 16:47 GMT

பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர்-ஜமால்பூர் வழித்தடத்தில் இன்று காலை 8.50 மணியளவில் 30 பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த சரக்கு ரெயிலின் பெட்டிகளிடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்துள்ளது.

இதனால் ரெயில் இரண்டாக பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கி சென்ற நிலையில், 20 பெட்டிகள் தண்டவாளத்தில் நின்றன. இது குறித்து தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்டவாளத்தில் நின்ற பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி இன்ஜினுடன் இணைந்து இருந்த 10 பெட்டிகள் கல்யாண்பூர் ரெயில் நிலையத்திற்கும், மீதம் உள்ள 20 பெட்டிகள் சுல்தான்கஞ்ச் ரெயில் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே இந்த சம்பவம் காரணமாக அந்த வழித்தடத்தில் நீண்ட நேரமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

ரெயில் சேவை மட்டுமின்றி, அந்த பகுதிக்கு அருகே உள்ள ரெயில்வே கிராசிங்கில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்த ரெயில்வே அதிகாரிகள், தற்போது அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்