சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள யாரும் விரும்பவில்லை - ஒவைசி
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது என்று நாடாளுமன்றத்தில் ஒவைசி கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நடந்த அரசியலமைப்பு மீதான விவாதத்தில் பங்கெடுத்துப் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுத்தீன் ஒவைசி,
அரசியலமைப்பு நிர்ணய சபையின்போது, சிறுபான்மையினர் எதிர்கொண்ட சவால்களால்தான் சிறையில் இருப்பது போன்று உணர்ந்தேன் என்று மவுலான ஆசாத் கூறியுள்ளார். இந்தியாவில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்கள் ஒடுக்கப்படும் பிரச்சினை 75 ஆண்டுகளாக தொடர்கிறது. யாரும் சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. வக்பு சொத்துகளைப் பறிப்பதே இங்கு ஒரே நோக்கம். உங்களுக்கு இருக்கும் பலத்தின் மூலம் வக்பு சொத்தை பறிக்க நினைக்கிறீர்கள் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு,
இந்தியா சிறுபான்மையினருக்கு சட்டப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டும் இல்லாமல், தங்களின் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளது. சிறுபான்மையினரின் நலன்களுக்காக அடுத்தடுத்து வந்த அரசுகள் பணிகளைச் செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் அதனைச் செய்துள்ளது என்றார்.