கள்ளக்காதலை கண்டித்த மாமியார் கொலை - கள்ளக்காதலன், தோழியுடன் மருமகள் கைது
கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை கொலை செய்த மருமகளை, கள்ளக்காதலன், தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (42 வயது). இவரது மனைவி அமுல் (38 வயது). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜசேகரின் தாயார் லட்சுமி (58 வயது). ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து வேலை செய்து வரும் நிலையில் வேலை சம்பந்தமாக அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று மாத கணக்கில் தங்கி விட்டு வருவார்.
இந்த நிலையில் அமுலுக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (42 வயது) என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. இதனை மாமியார் லட்சுமி கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மாமியார், மருமகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்த பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை செய்ததில் லட்சுமியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் எனவும் லட்சுமி உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினரை விசாரித்ததில் அமுலுக்கும் சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் என்பவரிடம் அமுல் மற்றும் அவரது தோழி பாரதி, கள்ளக்காதலன் சரவணன் ஆகியோர் சரணடைந்து தாங்கள் 3 பேரும் சேர்ந்துதான் கள்ளக்காதலை கண்டித்ததால் லட்சுமியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக வாக்குமூலம் அளித்தனர். கொலையை மறைக்க தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.