கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி விசாரணை: உலக சுகாதார நிறுவன தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
கொரோனா வைரஸ் தோன்றியது பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தக்கோரும் உலக சுகாதார நிறுவன தீர்மானத்துக்கு இந்தியா இங்கிலாந்து, ரஷியா உள்பட 60-க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
புதுடெல்லி,
சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில், கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது. அங்குள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டின.ஆனால், அதை சீனா மறுத்துள்ளது. கொரோனா உருவானது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குரல் கொடுத்து வருகிறார். சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் மீது டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தோன்றியது பற்றி விசாரணை நடத்தும் நிலைப்பாட்டை உலக சுகாதார நிறுவனம் எடுத்துள்ளது.
அதன் 73-வது கூட்டத்தொடர், நேற்று சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் தொடங்கியது. இது, 2 நாள் கூட்டமாகும்.காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில், இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை உலக நாடுகள் பரிந்துரை செய்ய வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற நோய் தாக்காதவாறு தடுக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும்.
உலக கால்நடை சுகாதார நிறுவனம், ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றுடன் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு தீர்மானத்துக்கு இந்தியா, இங்கிலாந்து, ரஷியா, மலேசியா உள்பட 60-க்கு மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.