24 மணி நேரமும் நெஃப்ட் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி
வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ வங்கி அனுமதி அளித்துள்ளது.
மும்பை,
மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் நெஃப்ட் எனப்படும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்பர் (NEFT) மூலமாக 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வரும் டிசம்பர் முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. இந்த முடிவு, சில்லறை பணம் செலுத்துதல் முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் சில்லறை செலுத்துதல் சிஸ்டம் மூலமாக தற்போது, பணி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே நெஃப்ட் மூலமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். நெஃப்ட் சிஸ்டம் மூலமாக ரூ.2 லட்சம் வரையில் பணப்பரிவர்த்தனை செய்யலாம். முன்னதாக கடந்த ஜூன் மாதம் முதல், ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் ரியல் டைம் செட்டில்மெண்ட் சிஸ்டம் (Real Time Gross Settlement System) மற்றும் நெஃப்ட் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் கிடையாது என்று அறிவித்தது.