குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5% வட்டி மானியம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
3 லட்சம் ரூபாய் வரையிலான குறுகிய கால விவசாயக் கடனுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.;
புதுடெல்லி,
மத்திய அமைச்சரவை ரூ.3 லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு நடப்பு 2022-23 நிதியாண்டு முதல் 2024 - 25 வரை, ரூ. 3 லட்சம் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க 2022-23 முதல் 2024-25 வரை உள்ள நிதியாண்டில் ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டிவிகிதத்தில் குறுகிய கால கடன் வழங்குவது தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.